சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறி செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்கு சொல்லியிருப்பதாக நாடாளுமன்ற. உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஆலோசனை குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..
கடந்தவாரம் கிளிநொச்சியில் இடம்பெற்ற சந்திப்பிற்கு பின்னர் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியினையும் இணைத்து தெளிவான ஒரு கலந்துரையாடல் இன்று முன்னெடுக்கப்பட்டது. இங்கே இருக்கின்ற சிவில் சமூக பிரதிநிதிகள் அரசியல்கட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பும் இணைந்து மார்ச்சில் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமைபேரவை அமர்வில் பொதுவான நிலைப்பாடு ஒன்றை முன்வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருக்கிறது. அது தொடர்பாக அனைத்து தரப்புகளிடமும் கலந்துரையாடி ஒரு வரைபை தயாரித்து அந்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
இதேவேளை நான் தயாரித்ததாக கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட வரைபு புலம்பெயரந்த அமைப்புக்களால் வரையப்பட்டது. அதனை நான் வரைந்ததாக தெரிவித்து இரு கட்சியினர் நிராகரித்துவிட்டனர். பின்னர் அதற்கு விக்கினேஸ்வரன் ஐயா அனுமதியை வழங்கியிருப்பதாக மின் அஞ்சல் ஒன்றை பார்த்தேன்.
நான் வரைந்தபடியால் நிராகரிக்கப்பட்டிருந்தது. நான் வரையவில்லை என தெரிந்ததும், ஏற்றுக்கொண்டது போல தெரிகிறது. அது ஒருபக்கம் இருக்கட்டும். நாம் இதுவரை பேசி இணக்கப்பாடு ஏற்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து ஒரு நிலைப்பாட்டிற்கு வரலாமா என்பது குறித்து ஆராய்வோம்.
அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பாக அரசுக்கு முன்வைத்துள்ள யோசனைகளில் மாகாணசபை பற்றி தீர்க்கமாக எழுதியிருக்கிறோம். மாகாணசபை முறையை ஒழிப்பதற்கு இடம்கொடுக்க முடியாது. அதிலே பாரிய பின்விளைவுகள் இருக்கிறது. இலங்கை அரசாங்கம் வெவ்வேறு ஜனாதிபதிகளின் கீழே சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கும் தங்களது வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள். அதை எல்லாம் மீறி இலங்கை அரசாங்கம் செயற்படமுடியாது என்ற உண்மையை அவர்களிற்கு சொல்லியிருக்கிறோம். அதனையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை எடுப்போம் என்றார்.