மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்கள் நேற்று (3) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. சந்தேபநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.கே.பண்டார தெரிவித்துள்ளார்.
கரடியனாறு, பதுளை பிரதான வீதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோகிராம் அமோனியா, ஜெலிக்னைட் குச்சி 729, சோவா வயர் 6,000 அடி, முலை வெடி 31, காரீயம் 500 கிராம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
ஏறாவூர், லக்கி வீதியை சேர்ந்த 53 வயதான சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையணியில் தளபதியாக இருந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
1994 இன் பின்னர் அவர் கல் குவாரி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக அனுமதிப்பத்திரத்துடன் கல் உடைக்க வெடிபொருட்களை பயன்படுத்தி வந்ததாகவும், கடந்த மாதம் கல் உடைக்கும் அனுமதிப்பத்திர் காலாவதியான நிலையில், வெடிபொருட்களை கொள்வனவு செய்து சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஏதேனும் குற்றச்செயலுக்காக அவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததா என விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.