சசிகலா நலம் பெற வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டதன் மூலம் அதிமுகவில் புதிய சலசலப்பை ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஏற்படுத்தியிருக்கிறார்.
சசிகலா தமது முதல்வர் பதவியை பறித்துவிட்டாரே என்கிற கொந்தளிப்பில் தர்மயுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ். முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓபிஎஸ், அவரது ஆதரவு 11 எம்.எல்.ஏக்கள் எதிராக வாக்களித்தனர்.
இதனால் ஓபிஎஸ்தான் சசிகலாவின் முதல் எதிரியாக இருந்து வந்தார். சசிகலாவால் கூட்டப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி. இது சசிகலா 4 ஆண்டுகளுக்கு முன்னர் சிறைக்குப் போகும் போது இருந்த நிலை.
தற்போது சசிகலா 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து விடுதலையாகிவிட்டார். ஆனால் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவேமாட்டோம் என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஓபிஎஸ் தரப்போ, சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக கனத்த மவுனம் காக்கிறது.
இதனிடையே சசிகலாவுக்கு வாழ்த்து போஸ்டர் அடித்தவர்கள் மீது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் இணைந்து நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப், சசிகலா நலம்பெற வேண்டும் என ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், சசிகலா பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல்நலம் பெற்று அறம்சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடவே, இது அரசியல்சார்ந்த பதிவு அல்ல. என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயபிரதீப் வெளியிட்ட இந்த பதிவு அதிமுக வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கட்சியின் தலைமையே சசிகலா குறித்து பேச வேண்டாம் என உத்தரவிட்டுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் மகனே இது போன்ற பதிவை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.