பிரித்தானிய மொடல்களில் பலர் வெளிநாடுகள் சிலவற்றில் சூரியக்குளியல் போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இன்று 1 மணிக்கு மேல் சில நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு நேரடி விமான சேவை தடை செய்யப்பட்டுள்ளதால், பரபரப்பாக நாடு திரும்பும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
ஐக்கிய அரபு அமீரகம், புருண்டி மற்றும் ருவாண்டா அகிய நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு நேரடி விமான சேவை இன்று 1 மணியுடன் நிறுத்தப்படுவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இதனால் பிரித்தானிய மொடல்கள், சமூக ஊடக பிரபலங்கள் உட்பட, ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் வெளிநாடுகளில் சிக்கிக்கொள்வதைத் தவிர்ப்பதற்காக கடைசி நேரத்தில் எப்படியாவது பிரித்தானியா திரும்பும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.
பிரித்தானிய வாழிட உரிமம் பெற்ற பிரித்தானியர்கள் அமீரகத்திலிருந்து பிரித்தானியா திரும்பியதும், தங்கள் குடும்பத்துடன் 10 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
வாழிட உரிமம் இல்லாதோர், தடை செய்யப்பட்ட பட்டியலில் இல்லாத நாடு எதற்காவது சென்று அங்கே 10 நாட்கள் தங்கியிருந்த பின் பிரித்தானியாவுக்கு திரும்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சட்டத்திலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தியே பழக்கப்பட்டு போன சிலர், நேரடியாக பிரித்தானியாவுக்கு வராமல், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து பிரித்தானியாவுக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வேறு சில மொடல்களோ, நாங்கள் அரபு நாடுகளிலேயே எங்கள் சூரியக் குளியலைத் தொடரப்போகிறோம் என்று கூறிவிட்டார்கள்.