தென்கொரியாவில் கொரோனா பரவல் தீரிவரமைந்து வருவதால் சந்திர புத்தாண்டு விடுமுறைகள் முடியும் வரை சமூக சுகாதாரக் கட்டுப்பாடுகளை இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதாக அந்நாட்டு பிரதமர் சுங் சை-கியூன் இன்று அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அறிவிப்பு தற்போதுள்ள கடும் கட்டுப்பாட்டு விதிகளை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், கடந்த டிசம்பர் ஆரம்பத்தில் அமுல்படுத்தப்பட்ட இதே கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில், வரும் பெப்ரவரி 11ஆம் திகதி சந்திர புத்தாண்டு தொடங்கவுள்ளது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டபோதும், கடந்த வாரம் நாடு முழுவதும் உள்ள மிஷனரி பயிற்சி பள்ளிகளில் புதிய கொரோனா கொத்தணி பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் அமுலில் உள்ள கட்டுப்பாடுகளைத் தொடர முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தென் கொரியாவின் தடுப்பூசி பிரசாரத்தையும், பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு முறையே அமைக்கப்பட்டிருக்கும் வசந்த பள்ளி தவணைத் தொடக்கத்தையும் எளிதாக்குவதற்கு தற்போதைய கொரோனா பரவலை மேலும் குறைக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுமார் 60 ஆயிரம் பேருக்குப் போதுமானதாக இருக்கும் ஃபைசரின் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் தடுப்பூசிகள் பெப்ரவரி நடுப்பகுதியில் உலகளாவிய விநியோகத் திட்டமான கொவாக்ஸ் ஊடாக நாட்டுக்கு வரும் என பிரதமர் சுங் குறிப்பிட்டுள்ளார்.