சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் ஆதரவாளர்கள் இன்றும் அரசாங்க எதிர்ப்புப் பேரணியை நடத்துகின்றனர்.
போராட்டங்களுக்கு எதிராக பொலிஸார் தடை விதித்துள்ளதுடன், கொரோனா தொற்றைக் காரணம்காட்டி கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர். எனினும், இவற்றை மீறி போராட்டங்கள் நடக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி இரண்டாம் திகதி அலெக்ஸி நவல்னிக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், தமது தலைவரை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி நவல்னி உதவியாளர்கள் நாடு தழுவிய பேரணிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மொஸ்கோ பேரணி ரஷ்யாவின் முக்கிய பாதுகாப்பு நிறுவனமான பெடரல் பாதுகாப்புச் சேவையின் தலைமையகத்திற்கு வெளியில் நடைபெறவுள்ளது.
44 வயதான அலெக்ஸி நவல்னி, ஜேர்மனியில் சிகிச்சை முடித்து, கடந்த ஜனவரி 17ஆம் திகதி ஜேர்மனியில் இருந்து ரஷ்யாவுக்குத் திரும்பிய நிலையில் கைதுசெய்யப்பட்டார்.
இவர் மீத, பரோல் விதிமீறல்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரது கைதுக்கு எதிராக கடந்த வாரம் சுமார் 100 நகரங்களில் நாடு தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கிட்டத்தட்ட நான்காயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் எச்சரிக்கையை ரஷ்ய உட்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இரினா வோல்க் நேற்று விடுத்தார்.
அத்துடன், தொற்று நோய் தடுப்பு விதிமுறைகளை மீறும் பங்கேற்பாளர்கள் குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ள போதும், நவல்னி ஆதரவாளர்கள் பேரணிக்குத் தயாராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.