கொழும்பு குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் என கூறி வீடுகளுக்குள் நுழைந்து 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வர்த்தகரின் வீட்டிற்குள் மோசடியான முறையில் புகுந்த நான்கு பேர் கொள்ளையடித்த நிலையில், தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேக நபர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த முறையில் கொள்ளையர்கள் வீடுகள் அல்லது வர்த்தக நிலையங்களுக்கு வர கூடும் என்பதனால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் அவ்வாறு விசாரணைக்கு வந்தால் அடையாள அட்டைகளை காண்பிப்பார்கள்.
விசேட சந்தர்ப்பங்களை தவிர ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொலிஸ் அதிகாரிகள் பொலிஸ் உத்தியோகபூர்வ வாகனங்களில் வருவார்கள்.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தாம் சிவில் உடையில் வந்திருக்கும் பொலிஸ் அதிகாரிகள் என கூறினாால் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வது பொது மக்களிடம் கடமையாகும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.