கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் குற்றவியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளவுள்ளதாக ஆங்கில ஊடகமான சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் அவ்வூடகம் குறிப்பிடுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமரைத் தவிர, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, அப்போதைய காவல்துறைத் தலைவர் பூஜித ஜயசுந்தர மற்றும் அப்போதைய தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிரா மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
ஆரம்பகால எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், தாக்குதல்களைத் தடுக்கத் தவறியவர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பெப்ரவரி முதலாம் திகதி ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வாவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
முதலாவது இடைக்கால அறிக்கை 2019ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதியும் இரண்டாவது இடைக்கால அறிக்கை 2020ஆம் அண்டு மார்ச் 2 ஆம் திகதியும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கவும், விசாரணைகள் மூலம் கண்டறியப்படும் தகவல்களின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
எட்டு தற்கொலை குண்டுதாரிகளால் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஹோட்டல்களையும் கத்தோலிக்க தேவாலயங்களையும் இலக்கு வைத்து தொடர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தொடர் தாக்குதல்களில் சுமார் 270 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 500 பேர் காயமடைந்தனர்.
ஆணைக்குழு 214 நாட்களில் 457 பேரிடமிருந்து சாட்சிகளை பதிவு செய்தது. அவர்களில் அரசியல், பாதுகாப்பு சேவைகளை சேர்ந்தவர்கள், அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்களும் அடங்குவர்.
இந்த அறிக்கை 472 பக்கங்கள், 215 இணைப்புகள் மற்றும் 6 தொகுதிகளை கொண்டதாகும் என மேலும் குறிப்பிட்டுள்ளது.