தீவிரவாத தாக்குதல் தொடர்பு காரணமாக பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் நபரின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு திட்டமிட்டதாக கூறி,
பாரிஸ் நகரில் கைது செய்யப்பட்டு தற்போது 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார் போஸ்னியா மற்றும் சுவிஸ் குடியுரிமை கொண்ட 31 வயது நபர்.
இவரது சுவிஸ் குடியுரிமையை பறிக்கவே பெடரல் நிர்வாகம் தற்போது நடவடிக்கை முன்னெடுக்க உள்ளது.
பாரிஸ் நீதிமன்றம் தமது இறுதி தீர்ப்பை வெளியிட்ட அடுத்த சில நாட்களில், குறித்த நபரின் சுவிஸ் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாகவும்,
பிரான்சில் இறுதித் தீர்ப்பு வந்தவுடன் அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவரவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், தமக்கு விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செல்லவும் வாய்ப்பிருப்பதாக கூறும் அதிகாரிகள்,
அவரது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டால், அவர் சுவிஸ் நாட்டுக்கு திரும்ப முடியாதபடி தடை விதிக்கப்படலாம், அல்லது ஐரோப்பியாவின் முக்கியமான 26 நாடுகளில் அவர் குடியேற முடியாதபடி தடை விதிக்கப்படலாம் கூறப்படுகிறது.
இதனிடையே, அந்த நபரின் பிரான்ஸ் சட்டத்தரணிகள், தண்டனைக்காலத்தின் ஒருபகுதியை சுவிட்சர்லாந்தில் செலவிட கோரிக்கை வைக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையிலேயே அவரது சுவிஸ் குடியுரிமையை பறிக்க பெடரல் நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு வருகிறது.
2017 ல் பிரான்சில் கைது செய்யப்பட்ட அந்த நபர், பயங்கரவாத தாக்குதல் திட்டமானது தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை எனவும், அந்த திட்டம் அதன் பின்னர் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.