கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களை எரித்தமைக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் வஜிர அபேவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது.
ஆனாலும் குறித்த தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யாமல் எரித்தமைக்காக அவர்களின் உறவுகளுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இதேவேளை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அரசியல் ரீதியாக தோற்கடிப்பதற்கு சர்வதேச ரீதியில் சதித்திட்டங்கள் செய்யப்படுகின்றன. அவைகளையும் தோற்கடிப்பதற்கு தொடர்ந்து போராடுவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.