இந்து மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலுள்ள ஆலயங்களுக்கு சிவராத்திரி பூஜைகளுக்காக இந்து கலாசார திணைக்களத்தினூடாக நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக இந்து மக்கள் மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அத்துடன் இதற்கு நடவடிக்கை மேற்கொண்ட புத்தசாசன மத கலாசார விவகார அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்சவுக்கு சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் பாபு சர்மா நன்றியையும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பௌத்த தர்மங்களை கடைப்பிடிக்கும் உன்னதமான தலைவர். அதேவேளை ஏனைய மதங்களையும் உயர்வாக மதிக்கும் குணமுடையவர்.
கடந்த முறை இந்தியா சென்றபோது திருப்பதி வெங்கடேஸ்வர பெருமானையும், காசி விஸ்வநாதரையும் தரிசனம் செய்தார். இது இந்து மக்களுக்கான பெருமிதமாக கொள்ளப்படுகின்றது. மேலும் நவராத்திரி பூஜை வழிபாடுகளுக்காக ஆலயங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தமையையும் இத்துடன் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறோம்.
இந்தவகையில் இவ்வருடம் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கும் நடவடிக்கையானது இந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா மேலும் தெரிவித்துள்ளார்.