ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசாங்கம் நாட்டை சீனாவின் காலனியாக மாற்ற முயற்சிப்பதாகவும் அதற்கு எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லையெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மிகவும் நெருக்கமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
எமது இறையாண்மைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மாத்திரமல்ல, எமது நாட்டை சீனாவின் காலனியாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். எமது இலங்கையை சீனாவின் காலனியாக மாற்ற நாங்கள் தயாரில்லை. துறைமுக நகரம் உருவாகிய பின்னர், அது மேல் மாகாணத்திற்கே சவாலை எதிர்நோக்க நேரிடும்.
சீனாவுக்கு தேவையானவற்றையே செய்ய தயாராகி வருகின்றனர். நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டம், கொழும்பு மாநகர சபை கட்டளைச் சட்டம், இலங்கை வணிக நிலையங்கள் சட்டம், நகரம் மற்றும் கிராம உருவாக்கல் கட்டளைச் சட்டம், வழிமுறை அபிவிருத்தி சட்டம், இலங்கை முதலீட்டு சபை சட்டம், பொது ஒப்பந்த உடன்படிக்கை சட்டம், தேசிய வருமான வரி சட்டம் உட்பட 14 சட்டங்களில் இருந்து துறைமுக நகருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
அப்படியானால், இது சீனாவின் காலனியாக மாறும் என்பது தெளிவானது. நாட்டு மக்கள் நாட்டை உருவாக்கவே ஆட்சியாளர்களை தெரிவு செய்தனரே அன்றி விற்பனை செய்வதற்காக அல்ல. நாட்டை குத்தகைக்கு விடவும் நாட்டுக்கு பாதிப்பான கொள்கைகளை உருவாக்க மக்கள் ஆட்சியாளர்களை தெரிவு செய்யவில்லை.
நாங்கள் நாட்டை முன்னேற்ற ஆட்சியாளர்களை தெரிவு செய்தோம். திருட்டுத்தனமாகவும் ரகசியமாக உடன்படிக்கைகளை செய்ய எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள். நாங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளோம்.
நாங்கள் தொடர்ந்த வழக்கு 15 ஆவது வழக்கு. எமது நாட்டின் வரைபடம் கூட மாறிவிடும். மேல் மாகாண வரைப்படத்திற்கும் துறைமுக நகரம் சொந்தமில்லை எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.