தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக வந்துள்ள நிலையில் தேர்தல் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக கருணாநிதி நினைவிடம் சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன.
தமிழகம், கேரளா,புதுச்சேரியில் ஏப்ரல் 6ஆம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாம் மாநிலத்திற்கு மூன்று கட்டமாகவும், மேற்கு வங்காளத்திற்கு 8 கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், ஐந்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. எவ்வாறாயினும், குறித்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் வெற்றியை கொண்டாட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதிமுக கடந்த 2011ஆம் ஆண்டு முதலே ஆளுங்கட்சியாக உள்ளது.
2011ஆம் ஆண்டு படு மோசமான தோல்வியை சந்தித்தது திமுக, எதிர்கட்சி வரிசையில் கூட அமரவில்லை. 2016 ஆம் ஆண்டு வலுவான எதிர்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்தது திமுக. எதிர்கட்சி தலைவரானார் மு.க ஸ்டாலின்.
இந்நிலையில், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.