தோஹா,கட்டாரிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 32 கோடி ரூபா பெறுமதியான 26 கிலோ தங்க பிஸ்கட்டுகள், நகைகளுடன் இருவரைக் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பிரதி சுங்கப்பணிப்பாளர் சுதத் த சில்வா தெரிவித்தார்.
விமான நிலையத்தின் பராமரிப்பு ஊழியர் ஒருவரும் பயணி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மிக நீண்ட நாட்கள் சுங்கப் பிரிவினர் முன்னெடுத்த விசேட கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றின் பலனாக இக்கைது நடவடிக்கை சாத்தியமானதாகவும், இது இலங்கையில் சுங்கப் பிரிவின் வரலாற்றில் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட அதி கூடிய நிறைக் கொண்ட தங்கம் இதுவெனவும் அவர் மேலும் கூறினார்.
கைப்பற்றப்பட்ட 26 கிலோ தங்கத்தில், தங்க பிஸ்கட்டுக்களும் தங்க நகைகளும் அடங்குவதாக குறிப்பிட்ட சுங்க ஊடகப் பேச்சாளர் சுதத் த சில்வா, விமான நிலைய பராமரிப்பு ஊழியர் தங்கத்தை உடலில் மறைத்து விமான நிலைய வளாகத்துக்கு வெளியே எடுத்து செல்ல எத்தணிக்கும்போது கைது செய்யப்பட்டதாக கூறினார்.
தோஹா,கட்டாரிலிருந்து வந்த பயணி, விமான நிலைய கழிவறையில் வைத்து விமான நிலைய பராமரிப்பு ஊழியரிடம் தங்கத்தை கொடுத்துள்ளார். அவர் அதனை உடலில் மறைத்துக்கொண்டு வெளியேறும் போதே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பின்னர் தங்கத்தை கொடுத்த பயணியையும் சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.