கோவிட் தொற்றுநோயிலிருந்து கைதிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அங்குனகொலபெலச சிறைச்சாலையில் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் அங்குள்ள ஏனைய கைதிகள் தொடர்பாக கையாளப்படும் முறைகள் குறித்து பல சிக்கல்கள் எழுந்துள்ளதாக, அந்த அமைப்பு செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட கைதிகள் வெளியேற்றப்பட்டதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்குனுகொலபெலச சிறைச்சாலை கண்காணிப்பாளர் தம்மிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் கைதிகள் எங்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து அவர் தமக்கு தெளிவான விளக்கத்தை தரவில்லை, என அந்த அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா மற்றும் செயலாளர் சுதேஷ் நந்திமல் சில்வா ஆகியோர் கையெழுத்திட்டு சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட கைதிகளின் உறவினர்கள் தங்களது அன்புக்குரியவர்களின் விபரங்களை அறிந்து கொள்வதற்கு இது தடையாக அமைந்துள்ளதாக இரு மனித உரிமை ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
கைதிகள் மத்தியில் அமைதியின்மை அதிகரித்து வரும் நிலையில், இதன் விளைவாக அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக போராட்டங்களை நடத்துவதற்கான பின்னணி அங்குனுகொலபெலச சிறைச்சாலையில் உருவாகியுள்ளதாக, அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆகவே சிறைச்சாலைக்குச் சென்று நிலைமைத் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை, அங்குனுகொலபெலச சிறைச்சாலையில் நடத்தப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையில், அடையாளம் காணப்பட்ட சுமார் 30 கொரோனா தொற்றாளர்கள் தங்களை தனிமைப்படுத்த கோரி போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு சமூக வலைத்தளத்தில் இந்தத் தகவல்களை வெளியிட்டிருந்தது.
கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தகவல்களுக்கு அமைய இலங்கையின் சிறைச்சாலைகளில் தற்போது 25,000ற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
அதிக நெரிசல் மற்றும் போதுமான சுத்தமின்மை ஆகிய காரணங்களால் கொரோனா தொற்று, சிறைச்சாலைகளில், வெளி உலகத்தை விட பல மடங்கு, வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் பிசிஆர் சோதனைகளை நடத்தப்படுவதில்லை என்பதால், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.