இந்திய அதிகாரிகள் குழு ஒன்று சிறப்பு வானூர்தி ஒன்றினூடாக இலங்கைக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் இந்திய உயர்ஸ்தானிகரத்தில் பணியாற்றுவதற்காகவே இடமாற்ற அடிப்படையில் இலங்கைக்கு வந்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.
இதனையடுத்து இவர்கள் இலங்கை அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தங்கவைக்கப்பட்ட பின்னரே இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இவர்கள் புதுடில்லியிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் கட்டாய 14 நாட்கள் தனிமைப்படுத்தலிலிருந்தார்கள் என்று இந்தியத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.
இந்தியாவில் கோவிட் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்திய பொது மக்கள் இலங்கைக்கு வருவது தடை செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் அண்மைக்காலத்தில் பல இந்திய வானூர்திகள் கட்டுநாயக்க வானூர்தி தளத்தை வந்தடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் அந்த வானூர்திகள் பொருட்களை ஏற்றி இறக்கும் சேவையில் ஈடுபட்டமை என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.