உலகம் முழுவதும் சில ஆண்டுகளுக்கு முன்பு நீல நிற கூர்மையான காந்த கண்ணழகால் பிரபலமான பாகிஸ்தானை சேர்ந்த இளைஞன் அர்ஷத் கான் (23) விரைவில் லண்டனில் தேநீர் விடுதியொன்றினை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள இட்வார் பஜாரில் அமைந்திருக்கும் தேநீர் கடையில் வேலை செய்த அர்ஷத் கான் (23) கடந்த 2016ஆம் ஆண்டு உலகளவில் பிரபலமானார். அர்ஷத் கானின் நீல நிற கண்கள், கூர்மையான பார்வையை பெண் புகைப்படக்களைஞரான ஜியா அலி சந்தி புகைப்படம் எடுத்து அதனை #chaiwala என்று ஹேஷ் டேக் இட்டு, பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது. இதை தொடர்ந்து#chaiwala டிரெண்டாகி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர் பெயரும் சாய்வாலா என பரவியிருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் அர்ஷத் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரு தேநீர் விடுதி ஆரம்பித்துள்ளார். மேலும் இந்தாண்டு இறுதியில் லண்டனில் தனது முதல் தேநீர் விடுதியை தொடங்கவுள்ளதாக அர்ஷத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவில், தொடர்ச்சியான முயற்சியால் மட்டுமே வலிமையும் ,வளர்ச்சியும் வரும். லண்டனில் இந்தாண்டு இறுதியில் முதல் தேநீர் விடுதியை திறக்கவுள்ளேன்.
எல்லோரும் என் பெயரை அர்ஷத் கான் என்றே வெளியில் தெரிவிக்குமாறு கூறுகிறார்கள். ஆனால் ‘chai wala’ என்பதே என் அடையாளமாகும், அதை மாற்றமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை,அர்ஷத்தின் தேநீர் விடுதியில் தேநீரை தவிர்த்து மெனுவில் 20 வகையான உணவுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.