கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றி எரியும் எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பலை ஆழ்கடலுக்கு நகர்த்த மேற்கொள்ளப்பட்ட திட்டம் தற்போதைக்கு சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் வரை கப்பலை ஆழ்கடலுக்கு நகர்த்த முடியாது என இலங்கை கடற்படை அறிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடற்படை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) அடங்கிய அதிகாரிகள், கப்பலை 50 கடல் மைல் தூரத்திற்கு கொண்டு செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர்.
எனினும், தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், கப்பலை ஆழ்கடலுக்கு நகர்த்த முடியாது என கடற்படை பேச்சாளர் இந்திகா டி சில்வா தெரிவித்துள்ளார்.
கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுக்குள் கொண்டு வர கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல்படையின் கப்பல்களான வைபவ், வஜ்ரா மற்றும் சமுத்ரா பிரேஹரி அத்துடன், டோர்னியர் விமானம் என்பன தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவ அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதகரம் அறிவித்துள்ளது.
கடந்த 20ம் திகதி கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலை தொடர்ந்து, கப்பலில் இருந்து 25 ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, கப்பலில் உள்ள கொள்கலன்களில் என்ன இருக்கிறது என்பது குறித்து அதிகாரிகளுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை.
சிங்கப்பூரின் கொடியின் கீழ் இந்த கப்பல் பதிவுசெய்யப்பட்டுள்ள குறித்த கப்பலில் நைட்ரிக் அமிலம் மற்றும் அழகுசாதனப் பொருள்களைக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
இது மே 15ம் தினதி இந்திய துறைமுகமான ஹசிராவிலிருந்து பயணத்தை ஆரம்பித்ததாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.