பெரும் சர்ச்சையில் தற்போது சிக்கியிருக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளி தொடர்பாக 11 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கருணாநிதி பேசியது தெரியவந்துள்ளது.
சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்தனர் மாணவிகள்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜகோபாலை கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் தொடர்பாகவும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
#PSBB to @arrahman and his mom.
From such a difficult childhood to a self made legend. 🙏 https://t.co/5PNp82mOKS pic.twitter.com/Dk3HWjqUOP
— tro lee (@trolee_) May 24, 2021
ஆஸ்கர் தமிழன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் முன்னர் அளித்த பேட்டி ஒன்றில், தாம் படித்த பள்ளியில் கட்டணம் கட்ட முடியாததால் தெருத்தெருவாக பிச்சை எடுக்க சொன்னார்கள் என பள்ளியின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஏ.ஆர். ரஹ்மான், ஆஸ்கார் விருது பெற்றபோது, ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, எங்கள் பத்ம சேஷாத்ரி பள்ளியின் டிராப் அவுட் ஸ்டூடண்ட் தான் ஏ.ஆர். ரஹ்மான் என பெருமிதம் பேசியிருந்தார்.
இதனிடையே 11 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் ஒய்.ஜி. மகேந்திரனின் நாடக பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, ஒய்.ஜி. மகேந்திரன் குடும்பம் நடத்தும் பத்ம சேஷாத்ரி பள்ளியின் பெயரை சொல்லாமல் அந்த பள்ளியில் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை தமக்கே உரிய பாணியில் சாதுரியமாக அம்பலப்படுத்தினார்.
அவர் பேசுகையில், என்னை மகேந்திரன் அழைத்த போதுகூட, அவருடைய தாயார் மற்றும் அவருடைய குடும்பத்தார் எல்லாம் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.
மிகவும் உரிமையோடு ‘நீங்கள் வந்து தான் தீரவேண்டும்’ என்று அவர்கள் கேட்டபோது, அவர்களுடைய காதிலே விழாமல் என்னுடைய மனைவி- ‘என் பேரனுக்கு ஒரு சீட் நீங்கள் பள்ளியிலே தர முடியாது என்று மறுத்துவிட்டீர்கள்.
இப்போது வந்து அவரைக் கூப்பிடுகிறீர்களே’ என்று சொன்னபோது, நான் அவருடைய வாயைப் பொத்தி, ‘சும்மா இரு’ என்று, இப்போது இந்த நாடகத்திலே பார்த்தது மாதிரி, மனைவியின் வாயைப் பொத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதை அவர் சொல்வதற்கு என்ன காரணம் என்றால், நான் அதை ரசித்தேன், அவர் சொன்னதை அல்ல- அவ்வளவு கண்டிப்பாக, அமைச்சர் வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும், பேரனாக இருந்தாலும் சட்டப்படி தான் நாங்கள் பள்ளியில் இடம் தருவோம், நடந்து கொள்வோம் என்பதை அவ்வளவு கண்டிப்பாக கடைப்பிடித்த காரணத்தால் தான் என பேசியிருக்கிறார்.




















