கோவிட் தொற்றின் மூன்றாவது அலை காரணமாக வணிகங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் சில சலுகைகளை வழங்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன்படி மூன்றாம் அலையை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள விரிவான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கடன்பட்டவர்களுக்கு மற்றொரு சுற்று நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, இது 2020 இல் வைரஸ் இலங்கையில் கண்டறியப்பட்ட நாளில் இருந்து நான்காவது சுற்று நிவாரணமாக அமைகிறது.
இது தொடர்பில் உரிமம் பெற்ற வணிக மற்றும் சிறப்பு வங்கிகளுக்கு மத்திய வங்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பாதிக்கப்பட்ட கடனாளிகள் தங்கள் கடன்களுக்கான தவணைகளை 2021 ஆகஸ்ட் 31 வரை காலந்தாழ்த்தி செலுத்தமுடியும். நிதி சிக்கல்கள், வேலை இழப்புக்கள், வேதனக்குறைப்பு மற்றும் வர்த்தக முயற்சிகள் மூடப்பட்டமை என்பவற்றைக் கருத்திற்கொண்டே இந்த நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடனாளியின் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மறுமலர்ச்சித் திட்டத்தை கருத்தில் கொண்டு வங்கிகள் அவற்றை நீண்ட காலத்திற்கு மாற்றியமைத்துக்கொள்ளலாம்.
இதன்போது வட்டி விகிதம் உட்பட, இந்த திட்டமிடப்பட்ட கடனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வங்கி மற்றும் கடன் பெற்றவர்கள்; ஏற்றுக்கொள்ளமுடியும்.
இந்த புதிய நிவாரணத் தொகுப்பைத் தவிர, வங்கிகள் தங்களது சொந்த விருப்பப்படி தற்போதைய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கடன் வாங்குபவர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்க முடியும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை மே 15 முதல் ஆகஸ்ட் 31 வரை அபராத வட்டி வசூலிக்க வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 இலட்சம் ரூபாவுக்கும் குறைவான மதிப்புள்ள காசோலைகளின் செல்லுபடியாகும் காலத்தை ஜூன் 30 வரை நீடிக்கவும், காசோலை திரும்பலுக்கான கட்டணங்கள் மற்றும் காசோலையை நிறுத்தி வைப்பதற்கான கட்டணங்களை, ஜூன் 30 வரை நிறுத்தவும் வங்கிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையில், எந்தவொரு கடன் பெற்றவரும் நிவாரணத்தைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக ஒரு வசதியை அதன் குறிப்பிட்ட திகதிக்கு முன்பே முன்கூட்டியே தீர்த்துக் கொள்ள விரும்பினால், எந்தவொரு ஆரம்ப தீர்வுக் கட்டணத்தையும் வசூலிக்கவேண்டாம் என்;று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.