இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி வரும் ஜுலை மாதம், இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், தற்போது இந்த இரு தொடர்களுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
இதில், ஜூலை 13-ஆம் திகதியில் துவங்கும் இந்த தொடர்கள் 25-ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில் வைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி ஜூலை 13-ஆம் திகதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி 16-ஆம் திகதியும், கடைசி ஒருநாள் போட்டி 18-ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டி ஜூலை 21-ஆம் திகதி நடைபெற உள்ளது.
இரண்டாவது டி.20 போட்டி 23-ஆம் திகதியும் கடைசி மற்றும் மூன்றாவது டி.20 போட்டி 25-ஆம் திகதியும் நடைபெற உள்ளது.
வரும் ஜுன் 18-ஆம் திகதி கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, உலகசாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக, இங்கிலாந்தில் நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளதால், இலங்கை அணிக்கெதிரான தொடரில், இளம் இந்திய படை விளையாடவுள்ளது.
ஆனால், இந்த தொடருக்கு இந்திய கேப்டன் யார் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதே சமயம் தவான் அல்லது ஹார்திக் பாண்ட்யா இருவரில் ஒருவர் தான் இந்த தொடர்களுக்கு கேப்டனாக இருப்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.