கொரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பளம் வழங்கப்படாது என மாகாண அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதையும் தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நாடுகளும் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. ஆனால் சில நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடையே பெரும் தயக்கம் நீடித்து வருகிறது. இதில் பாகிஸ்தான் முன்னணியில் இருக்கிறது.
அங்கு பல வாரங்கள் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட போதும், தற்போது கொரோனாவின் 3-வது அலை தொடங்கியிருக்கிறது. எனவே தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த தேசிய மற்றும் மாகாண அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் தயக்கம் காட்டும் மக்களை தண்டிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில் பஞ்சாப் மாகாணத்தில் தடுப்பூசி போடாதவர்களின் செல்போன் இணைப்புகளை துண்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது முதலில் வெறும் பரிந்துரையாக மட்டுமே இருந்த நிலையில், மக்களின் தயக்கம் நீடிப்பதால் அதை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும், இதை எவ்வாறு அமல்படுத்துவது என்பது குறித்து தொலைதொடர்புத்துறை முடிவு செய்யும் எனவும் மாகாண சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னதாக தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பளம் வழங்கப்படாது என மாகாண அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.