உலகமெங்கும் கொரோனா வைரஸ் ஆனது பரவி, தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.
மேலும், கொரோனாவில் இருந்து மீண்டாலும் அதன் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதே பெரும் சவாலாக ஆகிவிட்டது. கொரோனாவில் இருந்து மீண்டாலும் உடலில் எங்கு வேண்டுமானாலும் ரத்தம் உறைதலை ஏற்படுத்தலாம்.
இதனால் உடலில் கை, கால் போன்ற உறுப்புகளை இழக்கவும் நேரிடலாம். இதயம் நின்றுபோகலாம். எனவே தொடர் மருத்துவ கண்காணிப்பு அவசியம் என்கிறார்கள்.
அதன்பின், கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை வகையறாக்கள் தொற்றிக்கொள்ளும். அதுவும் கண்களை சேதப்படுத்தும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் என்று கண்டறிந்தனர். இப்போது அதற்கான மருந்துகளை கண்டுபிடித்து சிகிச்சை அளித்து போராடுகிறார்கள்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணு செயல்பாட்டை சேதப்படுத்தும், விந்தணுக்களின் எண்ணிக்கை அளவு, மற்றும் இயக்கம் ஆகியவற்றில் 50 சதவீதம் வரை பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், விந்தணுக்களின் உற்பத்தி அல்லது பாலியல் ஹார்மோன்களின் உருவாக்கத்தை பாதிக்கும். இது வெறும் கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்தது என்றும் கூறிவிட முடியாது.
கொரோனா பாதிப்பால் ஏற்படும் மனச்சோர்வு, மன அழுத்தங்களும் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நோய் தொற்றின் தீவிரம் விந்தணுக்களின் தாக்கம் மிதமாகவோ அல்லது தீவிரமாகவோ இருந்தால் தற்காலிக ஆண்மைக்குறைவுக்கு வழி வகுக்கும். நிரந்தரமான சேதம் ஏற்படுமா? என்பது பற்றி தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.