அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி தன்னுடன் குடும்பம் நடத்தியதாகவும், 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்து அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்றும் சாந்தினி தனது புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.
மேலும், இந்த புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதனையடுத்து மணிகண்டன் தலைமறைவாகி இருந்தார்.
அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இவரை தேடுதல் வேட்டையில் தற்போது மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரில் நண்பர் ஒருவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த அவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், சுமார் இரண்டரை மணி நேரம் மணிகண்டனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர் அளித்த பதில்களை பதிவு செய்தனர். விசாரணை நிறைவடைந்ததும், சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நடுவர் நீதிபதி முன்பு மணிகண்டன் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை ஜூலை 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.