பதிவு: ஜூலை 07, 2021 07:38 AM
வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அதிகம் தயாராகின்றன. முன்னணி நடிகர் நடிகைகளும் வெப் தொடர்களில் நடிக்க வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் சரத்குமாரும் புதிய வெப் தொடரில் நடிக்க இருக்கிறார்.
இந்த தொடருக்கு ‘இரை’ என்று பெயர் வைத்துள்ளனர். ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். இவர் தூங்காவனம், கடாரம் கொண்டான் ஆகிய படங்களை டைரக்டு செய்து பிரபலமானவர். திருப்பங்கள் மற்றும் திகில் காட்சிகளுடன் தயாராக உள்ளது .
இரை தொடரை நடிகை ராதிகாவின் ராடான் பட நிறுவனம் தயாரிக்கிறது. இதுகுறித்து ராதிகா கூறும்போது, “டிஜிட்டல் தளத்தில் எங்களுடைய அறிமுக தயாரிப்பாக உருவாகும் இரை வெப் தொடர் எப்போதும்போல் குடும்ப ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களும் உள்ள படைப்பாக இருக்கும். கிரைம் திகில் கதையாக இருந்தாலும் குடும்ப உறவுகளும் இருக்கும்.
சரத்குமார் எங்கள் தயாரிப்பு மூலம் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சி. நான் திரைத்துறையை மற்றொரு குடும்பமாகவே பார்க்கிறேன். கொரோனா கொடிய காலத்தை கடந்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் படப்பிடிப்பில் பங்கேற்பது மகிழ்ச்சி” என்றார்.
இந்த தொடருக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.