யூரோ கிண்ணம் இறுதிப்போட்டியில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட இங்கிலாந்து நட்சத்திர வீரர் மார்கஸ் ரஷ்போர்டை கடுமையாக விமர்சனம் செய்த ஆளும்கட்சி பெண் எம்.பி ஒருவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
நடந்து முடிந்த யூரோ கிண்ணம் இறுதிப்போட்டியில் இத்தாலிக்கு எதிராக பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட மூன்று வீரர்களில் மார்கஸ் ரஷ்போர்டும் ஒருவர்.
இணையத்தில் இன ரீதியான கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ரஷ்போர்ட், தமது நிலை குறித்த உருக்கமான கடிதம் ஒன்றையும் வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
இதனிடையே, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர வீரரான மார்கஸ் ரஷ்போர்டுக்கு டோவர் எம்.பி. Natalie Elphicke கிண்டலடிக்கும் வகையில் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இனியாவது தேவையற்ற அரசியல் விளையாட்டுகளில் நேரத்தை வீணடிக்காமல், பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்துவது எப்படி என அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பொது ஊரடங்கு நாட்களில் வசதியற்ற மாணவர்கள் இலவசமாக மதிய உணவு பெற மார்கஸ் ரஷ்போர்ட் முன்னெடுத்த பிரச்சாரம் பலனளித்தது மட்டுமின்றி, அவரது சேவையை பாராட்டி பிரித்தானிய ராணியார் MBE பட்டமும் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், Natalie Elphicke எம்.பி.யின் கருத்து கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள, அவர் உடனையே, அதற்கு விளக்கமளித்துள்ளதுடன், இங்கிலாந்து அணி வீரர்களை பாராட்டியும், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் தமது சமூக வலைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மட்டுமின்றி அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் உலக கிண்ணம் போட்டியில் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.