கொட்டித்தீர்த்த மழையால் லண்டன் மாநகரமே வெள்ளக்காடான நிலையில், பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய வீடுகளில் வாழும் கோடீஸ்வரர்கள் முகாம்களில் தங்கவேண்டிய சூழ்நிலை உருவானது.
நேற்றிரவு, வெறும் 90 நிமிடங்களில் கிட்டத்தட்ட 75 மில்லிமீற்றர் அளவுக்கு மழை கொட்டித்தீர்த்த நிலையில், தெற்கு லண்டனிலுள்ள சாலைகள் வெள்ளக்காடாக, கார்கள் 2 அடி உயர நீரில் நிறுத்தப்பட்டிருக்க, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், வீடுகளுக்குள்ளும் அலுவலகங்களுக்கும் வெள்ளம் புகுந்தது. ஆங்காங்கு ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வானிலை ஆராய்ச்சி நிலையம், தெற்கு இங்கிலாந்தில் பெரும் பகுதிக்கு மழை தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கையும், சுற்றுச்சுழல் ஏஜன்சி, Hampshireஇலுள்ள Basingstokeஇல் அமைந்துள்ள Loddon நதிக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு பெருவெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளன.
மக்கள் வெள்ளம் ஓடும் இடங்களில் நடக்கவோ, வாகனங்களில் செல்லவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பல இடங்களில் மின்வெட்டு காரணமாக சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதுடன், மின்சாரமும் தடைபட, மேற்கு லண்டனில் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய வீடுகளில் வசிக்கும் கோடீஸ்வரர்களும் முகாம்களில் தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.