இந்திய கிரிக்கெட் அணி கடந்த 1983ம் ஆண்டில் நடந்த உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை தேடி தந்தது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த வீரர் யாஷ்பால் சர்மா. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்த அவர், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார். அவருக்கு வயது 66.
கடந்த 1983ம் ஆண்டில் நடந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். உலக கோப்பை தொடரில் அவர் அடித்த 2 அரைசதங்கள் அணி வெற்றி பெறுவதற்கு பெரிதும் உதவியது.
அந்த தொடரின் முதல் ஆட்டத்தில், பலம் வாய்ந்த மேற்கு இந்திய தீவுகள் அணியை, இந்தியா வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய யாஷ்பால் சர்மா 89 ரன்கள் குவித்தார். அதேபோல், அந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 40 ரன்கள் (40 பந்துகள்), அரையிறுதியில் 61 ரன்கள் (115 பந்துகள்) எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
ஓய்வு பெற்ற பின் இந்திய கிரிக்கெட் வாரியம், பஞ்சாப் மற்றும் அரியானா கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பொறுப்புகளையும் வகித்து வந்த அவர், தனது மனைவி, இரு மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்து உள்ளார்.
அவரது மறைவுக்கு மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு தலைசிறந்த வீரர் மறைந்தது வேதனை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 1983ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்களை சேர்த்த இந்தியாவின் 2வது வீரர் என்ற பெருமையை பெற்றவர். நடுவராகவும், தேசிய அணி தேர்வு குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் அவரது பங்கு மறக்க முடியாதது என்றும் அனுராக் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி பிரதமர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், இந்திய கிரிக்கெட் அணியால் அதிகம் விரும்பப்பட்டவர். அணியின் சக வீரர்கள், ரசிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டவர்.
அவரது மறைவு வருத்தம் தருகிறது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுக்கு என்னுடைய இரங்கல்கள். ஓம் சாந்தி என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அவரது திகைப்பூட்டும் விளையாட்டு எப்போதும் நம்முடைய நினைவில் ஒரு பகுதியாக இருக்கும். அவருடைய மறைவு கிரிக்கெட் உலகிற்கு மிக பெரிய இழப்பு என கூறியுள்ளார்.