கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வெளியானது. இதன் பிறகு மீண்டும் அஜித்-வினோத் கூட்டணியில் ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அதே ஆண்டில் தொடங்கியது. ஆனால் அதன் பிறகு திரைப்படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத் மட்டுமல்லாது கிரிக்கெட் மைதானங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும், அரசியல் தலைவர்களிடமும் டுவிட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் வலிமை அப்டேட் குறித்து தொடர்ந்து கேட்டு வந்தனர்.
இந்த நிலையில் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என மோஷன் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போன நிலையில், அதனை நிறைவு செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, நடிகர் அஜித் மற்றும் வில்லனாக நடிக்கும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா மோதும் சண்டைக்காட்சியை படமாக்க படக்குழுவினர் கிழக்கு ஐரோப்பா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 10 நாட்களில் அங்கு செல்லும் படக்குழுவினர், 7 நாட்கள் படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.