தமிழகத்தில் பல கோடிகள் சொத்துக்கள் வைத்திருந்த நபர் ஆசிரியைகளை வலையில் வீழ்த்த ரூ 10 ஆயிரம் சம்பளத்தில் ஆசிரியர் வேலைக்கு சேர்ந்த நிலையில் அதன் காரணமாக தற்போது ஒரு கொலைகாரனாக மாறியுள்ளார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் அனிதா (40). இவர் தனியார் கலைக் கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். திருமணமாகாத இவர் தனது அக்கா வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி வீட்டின் முதல் மாடியில் வசித்து வந்த அனிதா வீட்டின் தரை தளத்தில் இருந்த அவரது அக்கா குடும்பத்தாரை தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்லியதோடு அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து அக்கா குடும்பத்தார் அனிதாவின் அறைக்கு சென்று பார்த்த போது, அவரது அறையின் கதவு உள் பக்கம் தாழிடப்பட்டு பூட்டப்பட்டிருந்தது.
அனிதாவின் உறவினர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தப்போது அனிதா முகத்தில் ரத்தக்காயங்களுடன் படுக்கையில் மயங்கிய நிலையில் கிடந்தார். பின்னர் கதவை உடைத்து அனிதாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிசார் அனிதாவின் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்து அதில் பலமுறையும் சம்பவம் நடந்த நேரத்தில் கடைசியாகவும் பேசியிருந்த காஞ்சிபுரம் அருகே நாயக்கன்பேட்டை அரிசி ஆலையின் உரிமையாளரும் அரசு பள்ளியின் தற்காலிக உடற்கல்வி ஆசிரியருமான சுதாகர் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
இதில் பேராசிரியை அனிதாவின் மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தது. உயிரிழந்த அனிதாவும், சுதாகரும் காஞ்சிபுரத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக பணியாற்றும் போது இருவருக்குள் காதல் மலர்ந்துள்ளது.
அனிதா தனியார் கலைக் கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக பணி மாறுதல் அடைந்த பின்னும், இவர்களுக்கு இடையேயான காதல் தொடர்ந்துள்ளது. அனிதா மட்டுமல்லாமல் மேலும் சில ஆசிரியைகளுடனும் சுதாகர் பழகி வந்ததாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கும் சுதாகருக்கு சொந்தமாக அரிசி ஆலையும், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் வசதியும் இருந்தாலும், ஆசிரியைகளுடன் பழகி காதல் வலையில் வீழ்த்த வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு, சுதாகர் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிக்கு சேர்ந்ததாக கூறப்படுகின்றது.
வேறு சில ஆசிரியைகளிடம் சுதாகருக்கு இருந்த தொடர்பு குறித்து அறிந்த அனிதா, சுதாகரிடம் அடிக்கடி சண்டையிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நீண்ட நாளாக தொடர்பில் உள்ள தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவும் சுதாகரை அனிதா வற்புறுத்தி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த 9ஆம் திகதி அனிதாவுக்கும், சுதாகருக்கும் மீண்டும் இது தொடர்பாக சண்டை வந்தது. அதில் ஆத்திரமடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் அனிதாவின் தாடை மற்றும் மார்பகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத அனிதா சுதாகரிடம் தப்பிக்க எண்ணி தன் அறையினுள் சென்று உள் பக்கமாக பூட்டிக் கொண்டு தனது உறவினர்களை செல்போனில் உதவிக்கு அழைத்துள்ளார்.
இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட சுதாகர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து கோடீஸ்வர ஆசிரியர் சுதாகரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பல கோடிகளுடன் வசதியான வாழ்க்கை வாழ்ந்த சுதாகர் பெண்கள் மீதான தவறான சபலத்தால் தற்போது சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.