சீனா மணிக்கு சுமார் 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மின்காந்த ரயிலை அறிமுகம் செய்துள்ளதுடன், இதனை மிதக்கும் ரயில் என்றும் சீனா அழைக்கின்றது.
மிதக்கும் ரயில் என அழைக்கப்படும் இந்த ரயில் சீனாவின் குயிங்டாவ் நகரில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
உலக அளவிலேயே அதிநவீன ரயில்கள் தொழில்நுட்பத்தில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் கடும் போட்டி நிலவி வரும் நிலையில்,பல நாடுகள் இரண்டு நாடுகளினதும் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், சீனா 600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன மின்காந்த ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இந்த ரயில் மூலம் கோவையில் இருந்த சென்னைக்கு ஒரு மணி நேரத்திற்கு குறைவான நேரத்தில் பயணிக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
சீனாவிலே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ரயில் மின்காந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.
மேக்லேவ் எனப் பெயரிடப்பட்டுள்ள ரயில் மட்டும் பயன்பாட்டிற்கு வந்தால் உலகிலேயே அதிவேகமாகச் செல்லும் போக்குவரத்து வாகனம் என்ற சிறப்பை இந்த ரயில் பெறும்.
ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளும் மின்காந்த ரயில் தொழில்நுட்பத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ரயில் மின்காந்த தொழில்நுட்பத்தின் மூலம் இயங்குகின்றது.அதாவது இதன் தண்டவாளம் மின் காந்தங்களைக் கொண்டிருக்கும்.
அதேபோல, ரயிலின் அடிப்புறமும் மின்காந்தத்தைக் கொண்டிருக்கும். காந்தத்தின் ஒரே துருவம் ஒன்றை ஒன்று எதிர்க்கும் என்பதால், இந்த ரயில் மிதக்கத் தொடங்கும். இதன் மூலம் அதிவிரைவாக இந்த ரயிலால் செல்ல முடிகின்றது.
இந்த ரயில் பயன்பாட்டிற்கு வந்தால், ஷாங்காய், பெய்ஜிங் இடையேயான 1,300 கிலோ மீட்டரை வெறும் 2.5 மணி நேரத்தில் கடக்க முடியும். இது விமானத்தை விட விரைவானதாகும்.
இரண்டு நகரங்களுக்கும் இடையே விமானத்தின் மூலம் பயணித்தால் 3 மணி நேரம் ஆகும். அதேபோல தற்போது உள்ள புல்லட் ரயில் பயணித்தால் 5.5 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.