தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கோவிட் -19 தடுப்பூசி மற்றும் வாழ்வாதார ஆதரவுக்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு மாகாணத்தில் சுமார் 60 ஆயிரம் பேர்வையிலும், கிழக்கு மாகாணத்தில் 74 ஆயிரம் பேர் வரையிலும், கோவிட் 19 தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு புனர்வாழ்வு, புனரமைப்பு விடயங்கள் தொடர்பான பிரதமரின் இணைப்பாளராக கீதநாத் காசிலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.
30 வயதுக்கு மேற்பட்ட அணைவருக்கும் மிக விரைவில் தடுப்பூசி போட முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் பொது மக்கள் மிக விரைவில் வழமைக்கு திரும்ப முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தடுப்பூசி தொடர்பில் சமூகத்தில் தயக்கம் காணப்படுவதாக கிளிநொச்சியை தளமாக கொண்ட பெண்கள் அமைப்பின் தலைவர் சுரேஷ்குமார் உஷானந்தினி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தடுப்பூசிகளைப் பற்றிய நம்பகமான தகவல்கள் எங்களுக்குத் தேவை, அவற்றை யார் யார்? தவிர்க்க வேண்டும், எதிர்வினை ஏற்பட்டால் எவ்வாறான அறிகுறிகளைக் காண முடியும்.
இந்த செய்தியை சமூகத்திற்கு திறம்பட எடுத்துச் செல்ல அரசாங்கம் தனது தாதியர்கள் வலையமைப்பை பயன்படுத்த வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார மறுமலர்ச்சிக்கான முயற்சிகளை அரசாங்கம் இரட்டிப்பாக்கா வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று தேசிய பொருளாதாரம் மற்றும் நாடு முழுவதும் வாழ்வாதாரங்களை கடுமையாக பாதித்திருந்தாலும், வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் குடும்பங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஏனெனில் அவர்கள் ஏற்கனவே ஒரு நீண்ட உள்நாட்டு யுத்தத்தின் பேரழிவு விளைவுகளை அனுபவித்து வருகின்றனர். அத்துடன், பெரும்பாலான குடும்பங்கள் பெண்கள் தலைமைத்துவத்தின் கீழ் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.