சிலருக்கு காக்கா குளியல் பிடிக்கும். இன்னும் சிலருக்கு நீண்ட நேரம் குளிப்பது பிடிக்கும். நீண்ட நேரம் குளிப்பதால் உடலில் எண்ணெய் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு உடலில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
கோடை காலத்தில் குளியல் மிக அவசியம். ஆனால் அது சரியான முறையில் இல்லாவிட்டால் சருமம் மற்றும் தலைமுடியில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிட வாய்ப்பு உண்டு. பாதிப்பு ஏற்படாதவாறு குளிப்பது எப்படி? அதற்கான வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம்.
அடிக்கடி குளிக்கலாமா?
சிலர் சற்று அதிகமாக வியர்வை வந்ததும் குளிக்க சென்று விடுவார்கள். இதுபோன்று அடிக்கடி குளிப்பதால் இயற்கையாக உள்ள ஈரப்பதத்தையும், மென்மையையும் சருமம் இழக்க நேரிடும். இதனால சருமத்தில் வறட்சி ஏற்பட்டு தோல் வறண்டு காணப்படும். அரிப்பு போன்ற பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கோடை காலத்தில் தினம் இருமுறையும், மழைக்காலத்தில் ஒருமுறையும் மட்டும் குளிப்பது சிறந்தது.
சருமத்துக்கு ஏற்ற சோப்..
சோப் தேர்வில் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். சருமத்தின் தன்மை அறிந்து அதற்கேற்ப சோப் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தும் சோப் சருமத்துக்கு ஒவ்வாததாக இருந்தால் அதை உடனே தவிர்ப்பது நல்லது. முகத்துக்கு பயன்படுத்தும் சோப்பை தனியாக வைத்திருப்பது சிறந்தது. முடிந்தவரை முகத்துக்கு சோப் பயன்படுத்துவதற்கு பதில் ராசாயம் அதிகம் சேர்க்காத பேஸ்வாஷ்களை பயன்படுத்துவது நல்லது. அதேபோல் அதிக நுரை உள்ள சோப்களை பயன்படுத்தாமல் சருமத்துக்கு ஏற்ற சோப்பை பயன்படுத்தலாம்.
துண்டு விஷயத்தில் கவனம்..
சோப் பயன்படுத்துவதுபோல் துண்டு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சிலர் உடலுக்கு பயன்படுத்தும் துண்டை தலைக்கும் பயன்படுத்துவர். எப்போதும் உடலுக்கும் தலைக்கும் தனித்தனியாக துண்டு பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருமுறை துண்டை பயன்படுத்தியதும் அதை தரமான சோப்பை கொண்டு துவைத்து வெயிலில் நன்கு உலர்த்தி காய வைக்க வேண்டும். துண்டில் முழுமையாக ஈரம் காய்ந்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
சுடுநீரில் கவனம்
பருவ காலத்துக்கு ஏற்ப நீரை பயன்படுத்துவது சிறந்தது. தலைமுடியை அலசும் போது அதிக சூடான நீரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சூடான நீரை பயன்படுத்தினால் மயிர்கால்கள் வலுவிழக்க தொடங்கும். மிதமாக சுடுநீரை பயன்படுத்துவதே சிறந்தது.
நீண்ட நேர குளியல் வேண்டாம்.
சிலருக்கு காக்கா குளியல் பிடிக்கும். இன்னும் சிலருக்கு நீண்ட நேரம் குளிப்பது பிடிக்கும். ஆனால் 10 நிமிடங்கள் குளியலுக்கு செலவிடுவதே போதுமானது. நீண்ட நேரம் குளிப்பதால் உடலில் எண்ணெய் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு உடலில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
மாய்ஸ்சுரைசர் அவசியம்..
குளித்து முடித்த பிறகு சருமத்தில் வறட்சி ஏற்படாமலிருக்க மாய்ஸ்சுரைசர் தடவிக்கொள்ள வேண்டும். இப்போது சரும வகைகளுக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. அதில் சரியானதை தேர்ந்தெடுத்து குளித்து முடித்த பின்னர் கட்டாயம் தடவிக்கொள்ள வேண்டும். பொதுவாக சுத்தமான தேங்காய் எண்ணெய்தான் சருமத்துக்கு சரியான மாய்ஸ்சுரைசர் என்பதால் அதை தடவினாலே போதுமானது.
குளியல் ஒரு சாதாரண அன்றாட நிகழ்வுதான் அதில் சில நெறிமுறைகளை கடைப்பிடித்தால் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.