நாட்டில் கோவிட் பரவல் நான்காவது அலை ஏற்படுமாயின், அதற்கான பிரதான காரணி டெல்டா வைரஸாகவே காணப்படும்.
எனவே இலங்கையில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின் அது கட்டுப்படுத்த முடியாததாகிவிடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் டெல்டா பரவலானது பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது.இங்கும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின் அது கட்டுப்படுத்த முடியாது.
எனவே சமூகத்திலுள்ள டெல்டா தொற்றாளர்கள் சரியாக இனங்காணப்பட வேண்டும் என்பதோடு, நான்காவது அலை உருவாகுவதையும் தடுக்க வேண்டும். அதற்கு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதோடு சுகாதார விதிமுறைகளையும் மிகவும் இறுக்கமாக பின்பற்ற வேண்டும்.
மேலும், தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அது மாத்திரமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வாக அமையாது.
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதும் அத்தியாவசியமானதாகும். காரணம் எந்த வகைத் திரிபுகளாகக் காணப்பட்டாலும் அவை பரவும் வழிமுறை ஒரே மாதிரியானதாகவே காணப்படும்.
நாட்டில் 61 டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள அதேவேளை, அது பரவும் வேகமும் மிகவும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விட டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு பாதிப்புக்களானது 1000 மடங்கு அதிகமாகக் காணப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.