ஒவ்வொரு இரவிலும் 90 நிமிடங்களிலிருந்து இரண்டு மணிநேரம் வரை அல்லது அதற்கும் மேலாக ஒவ்வொரு மனிதனும் கனவு காண்கிறான். கனவுகள் எப்பொழுதுமே நேரடியான அர்த்தங்களை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
சிறு வயதில் நாம் காணும் கனவுக்கு நம் பாட்டிமார்கள் அர்த்தம் சொல்லியிருப்பார்கள். பெரும்பாலும் அவை தவறானதாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஏனெனில், ஒருவருடைய கனவுக்கு ஒரு காரணி, காரணம் மட்டுமல்ல, பல காரணங்கள் இருக்கலாம்.
அதே நேரம் கனவு காண்பவருடைய அடி மனம் வரை தெரிந்தால் தான் கனவுக்கான அர்த்ததை கூற முடியும். ஆனால், சில கனவுகள் நம் அனைவருக்கும் ஒரே விதமாக, ஒரே மாதிரியாக வந்திருக்கும். அவற்றுக்கு சற்றேறக்குறைய ஒரே அர்த்தம் இருக்கக்கூடும்.
அதே போல கனவுகள் என்பவை நாம் நடக்கவேண்டுமென்று நினைப்பது மட்டுமல்ல, நாம் செய்யத் தவறியதாகவும், அதை அறியாமலும் கூட இருக்கலாம். கனவுகள் நமக்கு அவற்றை நினைவுபடுத்தலாம். சுருக்கமாக கனவுகள் ஒரு சம்பவத்தின், ஆசையின், உணர்வின் விளைவாகவும் இருக்கலாம், காரணமாகவும் இருக்கலாம்.