இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் ஷிக்கர் தவான் 40 ஓட்டங்களையும், தேவ்தத் படிக்கல் 29 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
133 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் குல்திப் யாதவ் 02 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக தனஞ்சய டி சில்வா தெரிவு செய்யப்பட்டதுடன், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.