இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது சாதியைச் சொல்லி இழிவு படுத்தியதாக இயக்குனர் ரத்தினகுமார், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு கதாசிரியராக இருந்துள்ள ரத்தினகுமார் எஸ். ஜே. சூர்யாவை வைத்து திருமகன் என்ற படத்தை இயக்கினார்.
பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் தான் நடத்தி வரும் யூடியூப் சேனலில் ரத்தினகுமாரை பேட்டி எடுத்திருக்கிறார்.
அந்த பேட்டியில் ரத்தினகுமார் , இளையராஜாவை அவரது சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசியதாகவும், சித்ரா லட்சுமணன் அதை அனுமதித்துள்ளதாலும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இளமுருகு முத்து என்பவர் இந்த புகாரினை அளித்திருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த பிப்ரவரி மாதம் இந்த பேட்டி வெளியானது.
மார்ச் மாதம் அப்போதைய டிஜிபியிடம் புகார் அளித்திருக்கிறோம். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், தற்போது புதிய டிஜிபியிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறோம்,
இதன் பின்னர் இளையராஜாவை இழிவாக பேசிய வீடியோவை அவர்களே தாமாக முன்வந்து யூடியூப்பில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
ஆதாரங்களை வேண்டுமானால் மறைத்து இருக்கலாம். ஆனால் குற்றம் குற்றம்தான்.
அதனால் இயக்குனர் ரத்னகுமார், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இருவரையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.