கடுமையான மற்றும் நாள்பட்ட வலியால் அவதிப்பட்டாலோ, மீண்டும் மீண்டும் வலியை அனுபவித்தாலோ பிசியோதெரபி சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம்.
உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் வலிகளை இயற்கை முறைகளாலும், உடற்பயிற்சிகளாலும் குணப்படுத்தும் சிகிச்சை முறை பிசியோதெரபி எனப்படுகிறது. அதாவது வலிகளை கைகள் மூலம் குணப்படுத்தும் சிகிச்சை முறை இதுவாகும். காயம் அல்லது நாள்பட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகும்போது உடல் இயக்க செயல்பாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதில் பிசியோதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் பாதிப்பை பொறுத்து பிசியோதெரபி சிகிச்சை முறைகள் மாறுபடும். அதற்கேற்ப பல்வேறு வகை பிசியோதெரபி சிகிச்சைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. பிசியோதெரபியின் நன்மைகள் பற்றி பார்ப்போம்.1. வலியை குறைக்கும்:
மூட்டுகள் மற்றும் மென்மையான திசு பகுதிகளில் ஏற்படும் வலியை போக்க உதவும். மூட்டு பகுதிகளை ஒன்றிணைக்கவும் துணைபுரியும். காயங்களால் ஏற்படும் வலியை போக்க பிசியோதெரபி சிகிச்சை முறையை பின்பற்றலாம். அதே வேளையில் தசை வலி தொடர்ந்து நீடித்துக்கொண்டிருந்தால் மருத்துவ ஆலோசனை பெற்று அதற்கேற்ப மருத்துவ சிகிச்சையை தொடர வேண்டும். அல்ட்ரா சவுண்ட், புற ஊதா கதிர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பங்களில் மின் அலைகளை தூண்டுவதற்கும், தசை மற்றும் மூட்டு இயக்கத்தை மீட்டெடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கடுமையான மற்றும் நாள்பட்ட வலியால் அவதிப்பட்டாலோ, மீண்டும் மீண்டும் வலியை அனுபவித்தாலோ பிசியோதெரபி சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம்.
2. ஒற்றைத்தலைவலி:
கடுமையான தலைவலியால் அவதிப்படுபவர்கள் பிசியோதெரபியை தேர்ந்தெடுக்கலாம். இது ஒற்றைத் தலைவலியை தணிக்கவும் உதவும். பிசியோதெரபி முறையில் மசாஜ் செய்வது தசைகளை தளர்த்த உதவும். ஒற்றைத்தலைவலியின் தீவிரத்தையும் குறைக்கும். மேலும் பிசியோதெரபி சிகிச்சை உடலில் ரத்த ஓட்டம் சீராக செல்வதற்கு வழிவகுக்கும். மன அழுத்தத்தையும் குறைக்கும். இந்த இயற்கையான சிகிச்சை காரணமாக ஹார்மோன்களும் நன்றாக செயல்படும். ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்படு பவர்களுக்கு பிசியோதெரபி சிறந்த தீர்வை தரும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
3. உடல் இயக்கம்:
உடலின் இயக்கம் மேம்படவும் பிசியோ தெரபி உதவும். ஒருவர், நிற்கும்போது, உட்கார்ந்திருக்கும்போது, நடக்கும்போது ஏதேனும் பிரச் சினையை எதிர்கொண்டால் பிசியோதெரபி பயிற்சியை மேற்கொள்ளலாம். இது உடல் இயக்க திறனை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவி புரியும்.
4. அறுவை சிகிச்சை:
சில சமயங்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் பிசியோதெரபியை முயற்சிக்கலாம். இது அறுவை சிகிச்சை போல் விரைவாக குணப்படுத்தாது. ஆனாலும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு பிசியோதெரபியே போதுமானதாக அமைந்திருக்கும். சிலருக்கு அறுவை சிகிச்சையும், பிசியோதெரபியும் தேவைப்படலாம். எந்த சிகிச்சை முறையை மேற்கொண்டாலும் முழுமையாக குணமடைவதற்கு பிசியோதெரபி உதவும்.
5. விளையாட்டு:
பொதுவாக விளையாட்டு வீரர்கள் பயிற்சியிலோ, போட்டியிலோ பங்கேற்கும்போது காயங்களால் அவதிப் படுவதுண்டு. முழங்கை, விலா எலும்பு, மூட்டு பகுதிகள் காயம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்களுக்கு பிசியோதெரபிதான் நிரந்தர தீர்வை அளிக்கும். விளையாட்டு தொடர்பான காயங்களுக்கு பிசியொதெரபியின் பங்களிப்பு அபரிமிதமானது.
6. நீரிழிவு:
நீரிழிவு நோயாளிகள் முழங்கால்கள், தோள்பட்டை, கழுத்து மற்றும் முதுகு வலியால் அவதிப்பட நேரிடும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த சில பிசியோதெரபி பயிற்சிகள் உதவும். அவை சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், வலியை குறைக்கவும் வழிவகை செய்யும். இதய நோய் மற்றும் பக்கவாதத்தைத் தடுக்கவும் பிசியோதெரபி உதவும்.
7. காயம்:
கடுமையான காயங்களில் இருந்து முழுமையாக மீள்வதற்கு பிசியோதெரபி கைகொடுக்கும். குறிப்பாக எலும்பு முறிவுக்கு பிசியோதெரபிதான் பரிந்துரைக்கப்படுகிறது. அது கால்களையும், மூட்டு பகுதிகளையும் ஒருங்கிணைக்க உதவுகிறது. எலும்பு முறிவுக்கு ஆளானவர்கள் சரியாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் நிரந்தரமான குறைபாட்டுக்கு வழிவகுத்துவிடும். காயங்களை படிப்படியாக குணப்படுத்தி முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு பிசியோதெரபி பக்கபலமாக செயல்படும்.