மிகக் கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய மார்பர்க் வைரஸ் மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா நாட்டில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு இப்போது உலக நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்டு வரவே உலக நாடுகள் பெரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இப்போது மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா நாட்டில் புதிதாக மார்பர்க் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மார்பர்க் வைரஸ் இந்நிலையில், அதி தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய மார்பர்க் வைரசஸ் பாதிப்பு மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியாவில் இப்போது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எபோலா மற்றும் கொரோனா வைரசைப் போலவே இதுவும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக் கூடியது. கினியாவில் கடந்த ஆண்டு தான் எபோலா தொற்றின் 2ஆம் அலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது அங்கு மார்பர்க் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
88% உயிரிழப்பு
இந்த கொடிய மார்பர்க் வைரசால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 88% பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தெற்கு குக்கெடோ மாகாணத்தில் உயிரிழந்த நோயாளி ஒருவரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் அவருக்கு மார்பர்க் வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மார்பர்க் வைரஸ் பல்வேறு இடங்களுக்கும் பரவியிருக்க வாய்ப்புள்ளதால் இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எந்தளவு ஆபத்து
அதேநேரம் மார்பர்க் வைரஸ் பரவும் ஆபத்து கினியா பிராந்தியா அளவில் அதிகமாக உள்ளதாகவும் சர்வதேச அளவில் குறைவாகவே உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது சற்றே ஆறுதல் தரும் செய்தியாகும்.
கடந்த 2019இல், இதேபோலத் தான் முதலில் சீனாவில் பரவ தொடங்கி கொரோனா பாதிப்பு, உலகையே புரட்டிப் போட்டுள்ளதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
எப்படி பரவுகிறது
மார்ஸ்பர்க் வைரஸ் பொதுவாகக் குகைகள் அல்லது சுரங்கங்களில் வாழும் வௌவால்களில் இருக்கும். அது மனிதர்களுக்கு மத்தியில் பரவ தொடங்கினால் மோசமான பாதிப்புகள் ஏற்படும். மார்ஸ்பர்க் வைரஸ் ஒரு நபரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் ஆபத்துகளும் உள்ளது.
அதாவது இந்த வைரசால் பாதிக்கப்படும் ஒருவரது உடலில் இருந்து வெளியேறும் உமிழ் நீர், வியர்வைச் சிறுநீர் மூலம் மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
என்ன நடந்ததது
கினியா நாட்டில் கடந்த ஜூலை 25ஆம் தேதி ஒருவருக்கு திடீரென மோசமான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முதலில் அவருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றே மருத்துவர்கள் கருதினர்.
அதன் பிறகு அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளைச் சோதனை செய்ததில் அவருக்கு மார்பர்க் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகளை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.