கடுமையான இருமல் மற்றும் காய்ச்சலுடன் காலி கராப்பிட்டிய மருத்துவமனைக்கு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவித்து வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில் அன்று இரவில் உயிரிழந்துள்ளார்.
பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனை மூலம் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. உயிரிழந்தவர் காலி யக்கலமுல்லையைச் சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியான இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக அவர் கடந்த 6 ஆம் தேதி கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
அதன்படி, அவர் வெளிநோயாளர் பிரிவிலிருந்து மருந்துகளுடன் வீட்டுக்குச் சென்றார், வீட்டில் ஒரு தனி அறையில் இருந்தபோது அன்று இரவு அவர் ஆபத்தான நிலையில் விழுந்தார்.
உடனடியாக அவர் கராப்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.