ஆப்கான் ராணுவ விமானம் ஒன்றை தங்கள் நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தியிருப்பதாக உஸ்பெகிஸ்தான் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேற்றத்துக்கு பின்னர் தலிபான்களை எதிர்த்து போராட இயலாத அரசுப் படைகள் கடந்த 10 நாட்களாக பின்னடைவை சந்தித்து வந்தது. ஒவ்வொரு மாகாண தலைநகராக முன்னேறி வந்த தலிபான்கள் நேற்று தலைநகர் காபுலை சுற்றி வளைத்தனர்.
இதன் காரணமாக அதிபராக இருந்த அஷ்ரப் கனி தனது நாட்டு மக்களை பரிதவிக்கவிட்டு விட்டு ராணுவ விமானம் மூலம் தஜிகிஸ்தானுக்கு தப்பியோடினார். அங்கு அவரின் விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு தற்போது ஓமனில் அவர் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
அங்கிருந்து அமெரிக்காவுக்கு அவர் செல்லக்கூடும் என கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அஷ்ரப் கானி விமானத்தில் புறப்பட்ட போது 4 கார்களும், ஒரு ஹெலிகாப்டர் முழுக்க பணத்தை நிரப்பிக் கொண்டு சென்றதாகவும் ரஷ்ய தூதரக செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவ விமானம் ஒன்றை தங்கள் நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தியிருப்பதாக உஸ்பெகிஸ்தான் அறிவித்துள்ளது.
தங்கள் நாட்டின் வான் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததால் ஆப்கன் ராணுவ விமானத்தினை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கனின் எல்லையை ஒட்டியிருக்கும் உஸ்பெகிஸ்தானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள Surxondaryo மாகாணத்தில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனை உஸ்பெகிஸ்தான் நாட்டின் ராணுவ செய்தித்தொடர்பாளர் Bahrom Zulfikorov உறுதிப்படுத்தி உள்ளார். ஆனால் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள், அவர்களின் கதி என்ன ஆனது என எந்தத் தகவலும் இதுவரையில் கிடைக்கவில்லை. சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானி மட்டும் பாராசூட் மூலம் உயிர் தப்பியதாக ரஷ்ய செய்தி நிறுவனமான RIA கூறியுள்ளது.
நேற்று காபுல் நகரை தலிபான்கள் சுற்றி வளைத்த போது உஸ்பெகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் தப்பிச் சென்ற 84 ஆப்கன் ராணுவ வீரர்களை அந்நாட்டின் ராணுவம் கைது செய்திருக்கிறது. இருப்பினும் அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அந்நாடு செய்து தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.