அரச ஊழியர்களிடமிருந்து அறவீடு செய்வது பொருத்தமாக அமையாது. வேண்டுமென்றால் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்திலிருந்து அறவீடுகளை செய்துகொள்ளலாம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் மாநாடு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் (S M Marikkar) இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை கொரோனா நிதியத்துக்கு அறிவிட வேண்டும் என ஆளுங்கட்சி தரப்பில் இருந்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்கமுடியாது.
அரச ஊழியர்களின் சம்பளத்தில் அரசு கைவைக்ககூடாது. 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பின் பின்னர் அரச ஊழியர்களுக்கு இன்னும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. ஆனால் செலவுகள் உச்சம் தொட்டுள்ளன.
எனவே, அரச ஊழியர்களின் சம்பளத்தில் அரசு கைவைக்கக்கூடாது. வேண்டுமானால் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை அறிவிடலாம்.
இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தனது சகாக்களுக்கு வரி விலக்களித்தது. இதனால் அரசுக்கு கோடி கணக்கில் இழப்பு ஏற்பட்டது. எல்லையின்றி பணமும் அச்சிடப்பட்டது. இதனால்தான் பணவீக்கம், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது என்பதை மறந்துவிடக்கூடாது.
5 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு பெரும் செலவு ஏற்பட்டதாக ஜனாதிபதி தமது உரையில் குறிப்பிட்டார். ஆனால் 2 மற்றும் 3 ஆம் சுற்றுகளின்போது 5 ஆயிரம் ரூபா அனைவருக்கும் கிடைக்கவில்லை. மொட்டு கட்சியின் பிரதேச அரசியல்வாதிகள் இதில் அரசியலே நடத்தினர்.
அதேபோல தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன என்று குறிப்பிடப்படுகின்றது. ஆனால் அவ்வாறு வழங்கப்படுவதில்லை. தற்போது 2 ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக்கூறப்படுகின்றது.
அதனை வைத்து என்ன செய்ய முடியும்? எனவே, ஜனாதிபதியின் உரையிலுள்ள உண்மைத்தன்மையை ஆளுங்கட்சியினரே உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்றார்.