கடந்த நாட்களில் சுவிற்சர்லாந்தில் மகுடநுண்ணித்தொற்று (கோவிட்-19) பெருகி வருகின்றது. மருத்துவமனை நாடும் மகுடநுண்ணித் தொற்று நோயாளிகளின் தொகையும் பெரும் ஏற்றம் கண்டுள்ளது.
இதன் விளைவு சுவிற்சர்லாந்து நடுவனரசு முன்னர் அறிவித்திருந்த இயல்புவாழ்வு திரும்பும் திட்டம் தள்ளிவைக்கப்படவுள்ளது.
தடுப்பூசிச்சான்று
25.08.2021 சுவிற்சர்லாந்து அரசு விடுத்துள்ள முன் அறிவித்தலிற்கு அமைய புதிதாக உள்ளரங்குகள் அனைத்திலும் தடுப்பூசிச்சான்று கட்டாயமாக்கப்படலாம்.
மகுடநுண்ணிப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்த சுவிற்சர்லாந்தின் அரசு எண்ணம்கொண்டு கலந்தறிதல் கூட்டத்தினை துறைசார் நோய்தொற்றுத் தடுப்பு வல்லுணர்களுடன் நடாத்திவருகின்றது.
இதன்படி 30.08.2021 புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பாரக்கப்படுகின்றது.
உணவகங்களின் உள்ளரங்குகளில், மதுநிலையங்களில் மற்றும் விடுதிகளில் தடுப்பூசி இடப்பட்ட சான்று கோரப்படலாம். தற்போது இது நடனவிடுதிகளில் வழமையான நடைமுறையில் உள்ளது.
உணவகங்களில் வெளி அரங்கில் அல்லது நில அடுக்குகளில் இவ்விதிக்கு விலக்கு இருக்கும். தங்குவிடுதிகளில் தங்குவதற்று தடுப்பூசிச் சான்று தேவைப்படாது. ஆனால் அங்குள்ள உணவகங்களில் இவ்வாறான சான்றினை வழங்கவேண்டிவரும்.
விழாக்கள்
சமய நிகழ்வுகளில், நீத்தார் இறுதிச்சடங்கு போன்ற நிகழ்வுகளில் தடுப்பூசிச் சான்று தேவையில்லை, ஆனால் ஆகக்கூடியது 30 ஆட்களே பங்கெடுக்கலாம் எனும் விதி அறிவிக்கப்படலாம்.
உள்ளரங்குகளில் கட்டாயம் முகவுறை அணிந்திருக்க வேண்டும். வெளியரங்குகளில் தற்போது உள்ள விதிகள் வழமைபோல் தொடரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தடுப்பூசிச்சான்று விலக்கு
பண்பாட்டு- மற்றும் பொழுதுபோக்கு நிலையங்கள், அருங்காட்சியகம், விலங்குகள் பூங்கா, உடற்பயிற்சி நிலையங்கள், உள்ளரங்கில் செயற்கை மலையேறும் பயிற்சிநிலையம், உள்ளக நீச்சல் தடாகம், நீர்ப்பூங்கா, சுடுநீர்தடாகம் அல்லது சூதாட்ட நிலையங்களில் தடுப்பூசிச் சான்று கட்டாயம் ஆக்கப்படலாம்.
வெளியரங்கு செயற்பாடுகளுக்கு இச்சான்று தேவைப்படாது. 30 ஆட்களுக்கு உட்பட்ட 16 வயதிற்கு உட்பட்ட இளவயதினர் குழுக்களாக பிரிக்கப்பட்ட அரங்குகளில் விளையாட்டுப்பயிற்சியில் ஈடுபட்டால் அவர்களுக்கு தடுப்பூசி சான்று தேவையிருக்காது.
காப்பமைவு
தொழில் நிலையங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் தொடர்பில் தெளிபடுத்தல் தேவையாக உள்ளது. அங்கும் தடுப்பூசிச்சான்று கட்டாயமாக்கப்படுமா என இப்போது தெரிவிக்க முடியாது.
ஒவ்வொரு நிறுவனமும் தமது சூழலிற்கு ஏற்ப காப்பமைவுகளை வரைந்துகொள்ள வேண்டிவரும்.
வழமையான நலவாழ்வு நடைமுறை
தூய்மைபேணும் மற்றும் நுண்ணிநீக்கம் செய்ய தற்போது நடைமுறையில் உள்ள பொது விதிகள் தெடர்ந்து பேணப்படவேண்டி இருக்கும். பொது இடங்களில் சமூக இடைவெளி பேணுதல் முகவுறை அணிதல் என்பன இன்றியமையாதனவாக இருக்கும்.
30.08.2021 அறிவிப்பை பொறுத்திருந்து பார்ப்போம்!