12 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றுவதற்கு சுகாதார அமைச்சர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பரிந்துரையை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஷெனால் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மாலை சுகாதார அமைச்சரை தமது பிரதிநிதிகள் சந்தித்த போது இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக மையம், பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை மற்றும் உற்பத்தியாளர்கள் ஆகியோரின் பரிந்துரைகளை பற்றி இதன்போது சுகாதார அமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகளில் 12 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு இந்த வகை தடுப்பூசியே வழங்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் மாதமளவில் நான்கு மில்லியன் பைசர் தடுப்பூசிகள் கிடைக்கும் எனவும், இந்த எண்ணிக்கை குறித்த வயதுடையவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்ற போதுமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.