நியூசிலாந்தின் – ஆக்லாந்தில் கடந்த 3ம் திகதி பல்பொருள் அங்காடி ஒன்றில் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையரை சுமார் 30 பொலிஸ் அதிகாரிகள் பின்தொடர்ந்து கண்காணித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலின் போது ஏழு பேர் காயமடைந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் மேற்கொண்ட அஹமது ஆதில் முகமது சம்சுதீனை சிறையில் இருந்து விடுவித்ததிலிருந்து 53 நாட்களாக 24 மணிநேரமும் கண்காணித்து வந்ததாகவும், அவர் எந்த நேரத்திலும் பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்வார் என்ற அச்சம் காணப்பட்டாகவும் கூறப்படுகின்றது.
நியூசிலாந்தில் அவர் சிறையில் இருந்தபோது, அதிகாரிகளை குத்தியதாலும், அவர்கள் மீது மலம் மற்றும் சிறுநீரை வீசியதாலும் அவர் அதிகபட்ச பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 3ம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நிலை ஒவ்வொரு நாளும் மேம்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இருவர் பொது சாதாரண விடுதிகளில் இருப்பதாகவும், மூவர் வீடு திரும்பியுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார்.
சம்சுதீன் 10 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து மாணவர் விசாவில் நியூசிலாந்திற்கு வந்து பின்னர் அகதி அந்தஸ்தைப் பெற்றார். இஸ்லாமிய அரசினார் ஈர்க்கப்பட்ட அவர், சிரியாவுக்கு செல்ல முற்பட்ட நிலையில், 2017ம் ஆண்டு முதன்முதலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது குடியிருப்பில் இஸ்லாமிய அரசு சார்ந்த காணொளிகள், கத்தி உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் மீட்டனர். இதனையடுத்து மோசடி மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்த பல்வேறு குற்றச்சாட்டுகளில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆறு வாரங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் புதிய குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டதுடன், இந்த ஆண்டு ஜூலை வரை சிறையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்சுதீன் தனது இறுதி ஆண்டை அதிகபட்ச பாதுகாப்பு ஆக்லாந்து சிறைச்சாலையில் “தீவிர ஆபத்து” என்று அடையாளம் காணப்பட்ட சிறிய எண்ணிக்கையிலான கைதிகளுடன் கழித்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.