இலங்கை இளைஞன் ஒருவருக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் மற்றும் BMW கார் ஒன்று பரிசாக கிடைத்துள்ளதாக கூறி 7 லட்சம் ரூபாய் மோசடி செய்ய முயற்சித்த நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தெரனியகல பிரதேசத்தை சேர்ந்த இளைஞனுக்கு இந்த அழைப்பு கிடைத்துள்ளது. அழைப்பேற்படுத்தியவர், வெளிநாட்டு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த லொத்தர் சீட்டிழுப்பில் குறித்த இளைஞன் வெற்றி பெற்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த பணப்பரிசினை வழங்குவதற்கு தகவல் அவசியம் என்பதனால், பெயர், விலாசம், கையடக்க தொலைபேசி இலக்கம், வங்கி கணக்கிலக்கம், மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்குமாறு மோசடியாளர் கோரியுள்ளார்.
தகவல்களை பெற்றவுடனேயே மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்று கிடைத்துள்ளது. அதில் லண்டன் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாகவும், மேலதிக தகவல்கள் பெற்றுக் கொள்வதற்காக அதில் உள்ள ஆவணங்களை திறந்து பார்க்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த ஆவணங்களை திறந்து பார்த்த போது, இந்த இளைஞனின் தகவல்களுக்கு கீழ் இரண்டரை கோடி ரூபாய் பணம் மற்றும் BMW கார் ஒன்று வெற்றி பெற்றுள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது. அந்த காரை துறைமுகத்தில் விடுவதற்காக குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கு இலக்கத்தில் இரண்டு லட்சம் ரூபாய் வைப்பிடுமாறு கூறப்பட்டுள்ளது.
குறித்த தகவல்களை நம்பிய இளைஞன் ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி கிளைக்கு சென்று அந்த பணத்தை வைப்பிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பணம் வைப்பிட்டவுடன் வருமான வரிக்காக மேலும் 5 லட்சம் ரூபாயை அன்றைய தினமே வைப்பிடுமாறு குறுந்தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இந்த குறுந்தகவலினால் ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய குறித்த இளைஞன் சம்பவம் தொடர்பில் தனது நண்பருக்கு தெரியப்படுத்தியுள்ளார். நண்பர் உடனடியாக பணம் வைப்பிடப்பட்ட இலக்கம் தொடர்பில் வங்கியிடம் தகவல் கோரியுள்ளார். பின்னரே அவர் மோசடி ஒன்றில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் ரூவன்வெல்ல பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இவ்வாறான மோசடி சம்பவங்கள் இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறான மோசடிகளில் சிக்க வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.