நாடு முழுவதிலும் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்கு அமைவாக தெற்கு வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புதிதாக இரண்டு பாலங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட சகல வீதிகளையும் துரிதமாக விஸ்தரித்து அபிவிருத்தி செய்யுமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
காலி நகரிலும் அண்டிய பிரதேசங்களிலும் காணப்படும் போக்குவரத்து நெரிசலை மட்டுப்படுத்துவதற்காக இரு பாலங்கள் நிர்மாணிக்கவும், எட்டு வீதிகளை விஸ்தரிக்கவும் வேண்டியுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன அடையாளம் கண்டுள்ளன.அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இந்த வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான பூர்வாங்கத் திட்டம் தயாரிக்கும் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய இத்தேபான மற்றும் மாதுகங்க வரை இரு பாலங்கள் நிர்மாணித்தல், கொழும்பு -காலி வீதியில் அதிவேக நெடுஞ்சாலை பிரவேச வீதி வரை 4 வழிப்பாதையை விஸ்தரித்தல், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ பரிமாற்ற வீதியிலிருந்து கராபிட்டிய போதனா வைத்தியசாலை வரை புதிய வீதி நிர்மாணித்தல், காலி பத்தேகம வீதியில் ஹிரிம்புர வரை விஸ்தரித்தல் ஆகியன இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் காலி நகரிலுள்ள பிரதான வீதிகளை அபிவிருத்தி செய்தல், காலி வக்வெல்ல வீதியை 4 வழிப்பாதையாக விஸ்தரித்தல், ரிச்மண்ட் ஹில் வீதியை கராபிட்டிய வரை விஸ்தரித்து அபிவிருத்தி செய்தல், ஹிரிம்புர சந்தியிலிருந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை வரையான வீதியை அபிவிருத்தி செய்தல், பின்னதுவயில் இருந்து காலி வீதி வரையில் உள்ள வீதிக்கு இணையாக புதிய வீதியொன்றை நிர்மாணித்தல் என்பனவும் இதில் அடங்கும்.
இந்த அனைத்து வீதி கட்டமைப்புகளுக்கும் தேவையான வீதி சமிக்ஞை பலகைகள், ஒளி சமிக்ஞை கட்டமைப்புகள், சுற்று வட்டங்கள் என்பவற்றை அபிவிருத்தி செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.