‘கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள பாலூட்டும் தாய்மார் முகக்கவசம் அணிந்தபடி குழந்தைகளுக்கு தாய்பால் ஊட்டலாம்’ என்று விசேட குழந்தை நல வைத்திய நிபுணர் டொக்டர் விஜி திருக்குமார் தெரிவிக்கின்றார்.
அத்துடன் கொரோனா தொற்றுக்கு உள்ளான தாய்மார் ஏற்கனவே அறிவுறுத்தியபடி வீட்டினுள் எந்நேரமும் முகக்கவசம் அணிந்திருப்பது அவசியம் என்றும் அவர் கூறுகின்றார்.
‘இக்காலத்தில் குழந்தைகளுக்கான பால்மாவைப் பெற்றுக் கொள்வது சிரமமாக இருந்தால் எமது நாட்டில் இயற்கையாகக் கிடைக்கும் பசும்பாலை குழந்தைகளுக்கு கொடுப்பது நன்று. எனினும், ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக தாய்ப்பாலையே கொடுக்க வேண்டும்’ என்றும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஷ்ட விரிவுரையாளரும், மட்.போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான டொக்டர் விஜி திருக்குமார் மேலும் தெரிவித்தார்.
“ஆறு மாதத்திற்கும் ஒரு வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு பசும்பாலின் செறிவைக் குறைத்து, அதாவது 100 ml காய்ச்சிய பாலில் இன்னும் 100 ml கொதித்தாறிய நீரை சேர்த்து கொடுக்க வேண்டும். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பசும்பாலை தனியாக காய்ச்சி கொடுக்கலாம். பசும்பாலை தினமும் பெற்றுக் கொள்வதில் சிரமம் உள்ளவர்கள் சந்தையில் கிடைக்கும் பதப்படுத்திய பாலை (fresh milk) கொடுக்கலாம். இப்பாலின் பொதியை உடைத்த பின்னர் குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக் கொண்டு தேவையான அளவை எடுத்து காய்ச்சிய பின்னர் நன்றாக கொதித்தாறிய நீரைக் கலந்து கொடுக்கலாம். இது ஆறு மாதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடிய ஒரு வழி முறையாகும்” என்று அவர் விபரித்தார்.
“சில தாய்மார் அடிக்கடி பிள்ளைகள எழுப்பி பால் கொடுக்க முயற்சிக்கின்றனர். அது ஒரு தேவையில்லாத விடயம். ஒரு தரம் பிள்ளை பால் குடித்த பின்னர் அது சமீபாடடைய அதாவது இரைப்பையில் இருந்து சிறுகுடல் வரை செல்ல 2-3 மணி நேரம் தேவைப்படுகின்றது. அதற்குப் பிறகுதான் பிள்ளைக்கு பால் கொடுக்க வேண்டும். இதை விடுத்து தங்கள் பிள்ளைக்கு வாய் காயும் என்றும், பசி ஏற்படும் என்றும், நீண்ட நேரம் தூங்கட்டும் என்றும் நினைத்து அடிக்கடி பால் ஊட்டுவதால் பிள்ளையின் நித்திரைக்கு பாதகம் ஏற்படும். இதனால் பிள்ளை நித்திரையில்லாமல் எந்த நேரமும் பால் குடித்தவாறு இருப்பதால் தாய்க்கு அசௌகரிகமாக இருக்கின்றது. தாயின் நித்திரையும் குழம்புகின்றது” என்று டொக்டர் விஜி திருக்குமார் மேலும் தெரிவித்தார்.
வி.ரி.சகாதேவராஜா