யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் யாழ். நகர நீர் குழாய் அமைப்பு மற்றும் தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளை சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ (Mahinda Rajapaksa) இன்று (06) முற்பகல் ஆரம்பித்து வைத்தார்.
நயினாதீவில் இடம்பெற்ற நிகழ்வில் அலரி மாளிகையில் இருந்து நேரடியாக கலந்து கொண்ட பிரதமர், மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப் பணிகள் மற்றும் யாழ் நகர நீர் வழங்கலுக்கான நீர் குழாய் அமைக்கும் நடவடிக்கை என்பவற்றை ஆரம்பித்து வைத்தார்.
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாக 186 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு பாதுகாப்பான குழாய் நீரை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதுடன் மத்திய அரசாங்கத்தின் நிதி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் இத்திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊடாக உயர் தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்துடன் கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அத்திட்டம் மற்றும் யாழ் நகர நீர் வழங்கல் திட்டத்தின் பாதுகாப்பான நீர் குழாய்களை பொருத்துவதன் மூலம் சுமார் மூன்று இலட்சம் மக்கள் நன்மையடைவதுடன் அத்திட்டங்களை 2023ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதிய வேலைத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் நகரம் மற்றும் அதனை அண்மித்து வாழும் சுமார் 12 இலட்சம் மக்களுக்கு குழாய் மூலமான பாதுகாப்பான நீரை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்பது விசேட அம்சமாகும்.
மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளுக்கான நீர் விநியோகம் முறைப்படுத்தப்படுவதுடன் இதன்மூலம் சுமார் 5000 குடும்பங்கள் நேரடியாக நன்மையடைவர்.