அனுமதிப் பத்திரம் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை வணக்கஸ்தலங்கள் மற்றும் பாடசாலைகளிலிருந்து 100 மீற்றர்களுக்கு அப்பாலேயே நடத்திச் செல்ல வேண்டும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பறிவித்தது.
கண்டி – பொல்கொல்ல பகுதியைச் சேர்ந்த மதுபான விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் தாக்கல் செய்த எழுத்தாணை கோரும் மனுவை ( ரிட் மனு) தள்ளுபடி செய்தே மேன் முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது.
டி.எல்.பீ.பி. பத்திரன்னகே என்பவர் தனது மதுபான விற்பனை நிலையம் இரு பாடசாலைகள், வணக்கஸ்தலம் ஒன்றினை அண்மித்து உள்ளதாக கூறி, தனக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை மது வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் ரத்து செய்ததாக குற்றம் சுமத்திருந்தார்.
எனினும் மதுவரி ஆணையாளர் நாயகம் தனது ஆட்சேபனைகளில்,
குறித்த மனுதாரரின் மது விற்பனை நிலையம்,இரு பாடசாலைகள் மற்றும் வணக்கஸ்தலம் ஒன்றினை அண்மித்து அமைந்திருந்ததால் பிரதேச மக்களிடையே பாரிய எதிர்ப்பு காணப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனாலேயே அந்த மது விற்பனை நிலைய அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்ததாக அந்த ஆட்சேபனைகளில் மதுவரி ஆணையாளர் நாயகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கு விசாரணைகளின் பின்னர், மது வரி திணைக்கள ஆணையாளர் அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்வதற்கு, இந்த விவகாரத்தில் எடுத்த தீர்மானம் எந்தவகையிலும் மது வரி சட்டத்தை மீறவில்லை என மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.
அத்துடன் அனுமதி பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள், கண்டிப்பாக பாடசாலைகள் மற்றும் வணக்கஸ்தலங்கள் அமைந்துள்ள இடங்களில் இருந்து 100 மீற்றர்களுக்கு அப்பாலேயே நடத்திச் செல்லப்பட வேண்டும் என இதன்போது மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மனுதாரரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.